செம்மறியாடு வளர்த்த சிங்கக்குட்டி
அந்த பெண் சிங்கம் அடர்ந்த காட்டிலிருந்து விலகி வந்து ஒரு மரத்தினடியில் படுத்துக்கொண்டிருந்தது. அதன் உடல் பலவீனப்பட்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணி வேறு. பசி தாங்கமுடியவில்லை. ஓடும் மிருகங்களைத்தொடர்ந்து ஓட முடியாமல் ஏதாவது பலவீனமான மிருகம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தது.
அதே நேரத்தில் ஒரு செம்மறியாட்டுக்கூட்டம் அந்த வழியாகச் சென்றது. தனியாக ஏதாவது ஆடு அகப்படுமா என்று பார்த்தது பெண் சிங்கம். அதன் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பதே போல் ஒரு ஆடு அங்கே நின்றது. அதுவும் நிறைமாத கர்ப்பிணியாயிருந்தது. பிரசவ வலியால் அதனால் வேகமாக நடக்க முடியவில்லை. அடுத்த நிமிடம் கொழுக் மொழுக்கென்று ஒரு ஆட்டுக்குக்குட்டியைப் பிரசவித்தது.அப்பாடா என்று பெருமூச்சு விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தது.
பெண் சிங்கம் அதை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தது.
தப்பித்து விட வேண்டும் என்று துடித்தது ஆடு. ஆனால் அப்போது தான் பிறந்த குட்டியை விட்டு விட்டுப் போக மனம் வரவில்லை. பயத்தில் உறைந்து போய் அசையாமல் நின்றது. அதையே குறி வைத்துப் பாய்ந்தது சிங்கம்.
அந்த நேரம் பார்த்து தான் அதற்கும் பிரசவ வலி வர வேண்டுமா? குத்தி எடுக்கும் வலியில் குறி தவறிய சிங்கம் தாய்க்கு பதிலாக அப்போது தான் பிறந்த குட்டியின் மேல் விழுந்தது. ஆட்டுக்குட்டி அப்படியே நசுங்கி உயிரை விட்டது. எக்குத்தப்பாக விழுந்ததில் பலமாக அடிபட்டு சிங்கமும் இறந்து விட்டது. அதற்குள் அதன் குட்டியும் வெளியே வந்து விட்டது. தாய் இறந்து விட்டது தெரியாமல் தட்டுத்தடுமாறி தன் தாயின் முலையைக் கண்டுபிடித்து, பால் குடிக்க முயன்றது சிங்கக்குட்டி.
ஒன்றும் கிடைக்கவில்லை.
மீண்டும் தடுமாறிக்கொண்டே
செம்மறியாட்டின் முலையைக் கவ்விக்கொண்டது.
அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத நிகழ்ச்சிகளால் அதிர்ச்சியில்
உறைந்திருந்த ஆடு பால் குடிப்பது யார் என்று கூட பார்க்க வில்லை. அந்தத்தாய்க்கு பால் கொடுக்க வேண்டிய கட்டாயம். சிங்கக்குட்டிக்கு பால் குடிக்க வேண்டிய கட்டாயம். தன்னைக் கொல்ல வந்து தன் மகனைக்கொன்ற சிங்கத்தின் குட்டிக்கு அந்தத்தாய் ஆடு அன்புடன் பால் கொடுத்தது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சிங்கக்குட்டியுடன் மெதுவாக நடந்து சென்று தன் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டது.
அன்றிலிருந்து சிங்கக்குட்டி
தாய் ஆட்டுடனேயே சுற்றிக்கொண்டிருந்தது. இது ஏதோ வித்தியாசமான குட்டி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. தாய் ஆட்டுக்கோ தன் குட்டியைப்பற்றி மிகவும் பெருமை. சிங்கக்குட்டி வளர்ந்தது. எல்லாரையும் போல் புல் தின்றது. 'மே, மே' என்று கத்தியது. தாய் ஆடு சொன்ன படி கேட்டது. ஆனால் தான் மற்றவரைப்போல் இல்லை என்பது அதற்கு விரைவிலேயே புரிந்து விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக இருக்க அதனால் இயலவில்லை. தனியாகவே பெரும்பாலும் இருந்தது. மற்ற ஆடுகள் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. ஆனால் தாய் ஆடு மட்டும் எல்லாரையும் போல் இவன் இருக்க மாட்டேன் என்கிறானே என்று மிகவும் கவலைப்பட்டது.
ஒரு நாள் சிங்கக்குட்டி தூரத்திலிருந்து ஒரு ஆண் சிங்கத்தைப்பார்த்தது. அதன் உடல் பயத்தால் கிடுகிடுவென்று
நடுங்கியது. அங்கிருந்து விரைந்து ஓடி வந்து விட்டது. அதே சமயம் அந்த சிங்கத்தைத் திரும்பத்திரும்ப
பார்க்கவேண்டும் போலவும் இருந்தது. மீண்டும் எப்போது அதைப்பார்ப்போமோ என்று ஏங்கத் தொடங்கியது. இந்த அனுபவத்தை அது தன் தாயிடம் கூட சொல்லவில்லை.
சில நாட்கள் கழித்து காட்டில் புல் மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு பகல் வேளையிலேயே சிங்கத்தைப்பார்த்தது. அங்கிருந்து ஓடி விட வேண்டும் போலவும் இருந்தது. ஆனால் ஓடவும் மனம் இல்லை. நடுங்கிக்கொண்டே நின்றது.
சிங்கம் அதை நெருங்கி வந்தது. குட்டி இரண்டடி பின் வாங்கியது. "நில். என்னைப்பார்த்து ஏன் பயப்படுகிறாய்?" என்றது சிங்கம்.
"நீங்கள் சிங்கம் தானே! என்னை சாப்பிட்டு விடுவீர்கள் அல்லவா? உங்கள் அருகே போகவே கூடாது என்று என் அம்மா கூறியிருக்கிறார்கள்." என்றது.
சிங்கத்துக்கு ஒரே சிரிப்பு." உன் அம்மா யார்? இன்னும் என்ன வெல்லாம் உன் அம்மா கூறியிருக்கிறாகள்?" என்றது.
சிங்கக்குட்டி சொன்னது," என் அம்மா ஒரு செம்மறியாடு. நாங்கள் எல்லாம் புல், இலை தழை தான் சாப்பிட வேண்டும். நடுக்காட்டுக்குப் போகக்கூடாது. ஏதாவது பெரிய மிருகத்தைப்பார்த்தால் ஓடி வந்து விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்."
சிங்கம் விடவில்லை.
"அப்படியா? நீ யார்?" என்றது.
"நான் செம்மறியாடு. எனக்கு உங்களைப்பார்த்தால் பயமாக இருக்கிறது. நான் என் அம்மாவிடம் போகிறேன்." என்றது சிங்கக்குட்டி.
"அட மடையா! நீயும் சிங்கம் தானடா. நீ ஏன் இப்படி ஆடு போல் நடந்து கொள்கிறாய்?" என்று கேட்டது.
"அய்யய்யோ! எனக்கு சிங்கம் என்றால் மிகவும் பயம். என்னைப்போய் சிங்கம் என்று சொல்கிறீர்களே!" என்றது.
சிங்கம் அதனை ஒரு ஓடையினருகில் தர தர என்று இழுத்துக்கொண்டு
சென்றது. "குனிந்து தண்ணீரில் பார்." என்றது.
" அய்யோ! இன்னும் ஒரு சிங்கம். நான் என்ன செய்வேன்!" என்று பயந்த ஆட்டைப்போல் கத்தியது.
சிங்கம் பலமாக கர்ஜித்தது."முட்டாளே! நடுங்குவதை நிறுத்து. நீ ஒரு சிங்கம். ஆட்டைப்போல் கத்தாதே! கம்பீரமாக கர்ஜனை செய்." என்றது.
"நானா? சிங்கமா? இல்லை. இல்லவே இல்லை. நான் பிறந்தது முதல் ஆடாகத்தான் இருக்கிறேன்."என்றது சிங்கக்குட்டி.
அப்படி சொன்னதே தவிர சிங்கத்தின் மேல் தனக்கிருந்த பயம் குறைந்திருப்பது
அதற்கு நன்றாகத் தெரிந்தது.
பெரிய சிங்கம் சொன்னது. " இங்கே பார்! நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும்
நீ சிங்கம் தான்! ஆடுகளுக்கிடையில் வளர்ந்து விட்டதால் உன்னை ஆடு என்று நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய். அடிக்கடி இந்த ஓடையில் உன் முகத்தைப்பார்த்துக்கொள். 'நான் சிங்கம். ஆடு அல்ல என்று உனக்கு நீயே சொல்லிக்கொண்டிரு.
நான் சிறிது நாள் கழித்து திரும்ப வருவேன்." என்று சொல்லிவிட்டு
சிங்கம் அங்கிருந்து சென்று விட்டது.
சிங்கக்குட்டிக்கு அதிர்ச்சியாகவும்
இருந்தது. மகிழ்ச்சியாகவும்
இருந்தது. இவ்வளவு நாட்கள் தான் தேடிக்கொண்டிருந்தது கிடைத்து விட்டது போல் உணர்ந்தது.
"நான் சிங்கம்! நான் சிங்கம்!" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தது. அதனால் புல்லை சாப்பிட முடியவில்லை. நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே
வந்தது. பெரிய சிங்கத்தைப்பார்க்க வேண்டும் என்ற அதன் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு நாள் பலவீனமான தன் உடலை எப்படியோ இழுத்துக்கொண்டு அது நடுக்காட்டுக்கு வந்தது.அதே நேரத்தில் பெரிய சிங்கம் அப்போது தான் வேட்டையாடிக்கொன்ற
ஒரு மானைக்கொண்டு
வந்து அதன் முன் போட்டது. "உம். சாப்பிடு."என்றது. "நாங்கள் இறைச்சியெல்லாம் சாப்பிடக்கூடாது என்று என் அம்மா கூறியிருக்கிறார்கள்." என்றது.
"இப்போது இதை நீ சாப்பிடுகிறாயா இல்லை உன்னைக் கொன்று விடட்டுமா?" என்று மிரட்டியது பெரிய சிங்கம்.
பல நால் பட்டினியாலும் , சிங்கத்தில் மேல் உள்ள பயத்தாலும் அந்த இறைச்சியைக் கவ்வி மென்று விழுங்கியது சிங்கக்குட்டி. நான்கு வாய் சாப்பிட்டவுடன் அதன் உடலில் புதிய சக்தி பாய்ந்தது போல் இருந்தது. அதன் பிடரி மயிர் சூரிய ஒளியில் மின்னியது. சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, தலையைத் தூக்கி முதன் முறையாக சிங்கக்குட்டி கர்ஜித்தது. அதன் ஒலி அந்தக் காடு முழுவதும் எதிரொலித்தது.
*****
இது சிங்கக்குட்டியின்
கதை மட்டுமா? நம் ஒவ்வொருவரின் கதை அல்லவா? நம்மை நாம் உணரத்தயாராக இருக்கும் போது குரு நம்மைத்தேடி வந்து, நம்மை நமக்கு உணர்த்துகிறார்.
சிறு வயதில் படித்த கதை. உங்களில் பலருக்குத்தெரிந்திருக்கும். என் நடையில் எழுதியிருக்கிறேன்.
Image courtesy: Pikist