Sunday 4 October 2015

ரங்க புர விஹாரா




பிருந்தாவன ஸாரங்கா ராகத்தில் அமைந்துள்ள முத்துஸ்வாமி தீக்ஷிதரின் 'ரங்க புர விஹாரா' என்னும் பாடலை இசைக்குயில் M.S. சுப்புலக்ஷ்மியின் குரலில் கேட்டுப்பரவசப்படாதவர் அபூர்வம். அந்த அழகிய பாடலின் பொருளின் அழகை முழுமையாக உணரும் போது அந்தப்பரவசம் பன்மடங்கு அதிகரிப்பது உண்மை.

தீக்ஷிதரின் மொழிப்புலமையும், பக்தி உணர்வும் போட்டி போட்டுக்கொண்டு சொற்கள் வந்து விழும் அழகும், அவை செவிக்கு விருந்தாகும் போதே அறிவுக்கும் ஆனந்தம் அளிக்கும் அற்புதமும், அனுபவித்தால் தான் புரியும். இப்பாடலின் பொருள் முழுவதும் புரியாமலே அதை ரசித்தவர்கள் பொருள் புரிந்து ரசித்துப்பேரானந்தம் பெற வேண்டும் என்னும் ஆசையில் எழுந்தது தான் இந்த முயற்சி. என்னால் இயன்ற வரை அதற்குப்பொருள் கொடுத்திருக்கிறேன். ரசித்து ஆனந்தியுங்கள்!

இந்தப்பாடல் ரங்க நாதருக்காக எழுதப்பட்டதா அல்லது ஸ்ரீரங்கத்தில் உள்ள பட்டாபிராமருக்காக எழுதப்பட்டதா என்பது நிச்சயமாகத்தெரியவில்லை. ராமரும் ரங்க நாதரும் திருமால் தானே! ஆகவே இருவரையும் குறிக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்.



 Rangapura Vihara
Ragam: Brindavana Saranga
Talam: Rupakam
Composer: Mutthuswami Dikshitar

Pallavi:

Rangapura Vihara Jaya Kodanda Raamaavataara Raghuvira Sri

Anupallavi:

Angaja Janaka Deva Brndavana Saarangendra Varada Ramanta
Ranga Shyamalaanga Vihanga Turanga Sadayapanga satsanga

Charanam:

Pankajaptakula Jalanidhi Soma Vara Pankaja Mukha Pattabhirama Padha
Pankaja Jitakama Raghurama Vaamaanka Gata Sitavara Vesha
Seshaanka Shayana Bhakta Santhosha Enaankaravinayana Mrudutara bhaasha Aka
Lanka Darpana Kapola Visesha Muni-
Sankata Harana Govinda Venkata Ramana Mukunda
Sankarshana Mula Kanda Sankara Guruguhananda



திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ளவனே!  கோதண்டத்தை ஏந்தி ராமனாக அவதரித்தவனே! ரகு குலத்தில் தோன்றிய வீரனே!

அங்கஜன் எனப்படும் மன்மதனின் தந்தையே! தேவர் குழாத்தைக்காத்தவனே! கஜேந்திரனுக்கு அருள் பாலித்து வரம் அளித்தவனே! திருமகளின் உள்ளத்தில் வசிப்பவனே! கருநீல வண்ணத்தோனே! கருடனை வாகனமாகக்கொண்டவனே! இரக்கம் நிறைந்தவனே! நல்லோர்களின் கூட்டத்தில் இருப்பவனே!

தாமரையின் நண்பனாகிய சூரியகுலம் என்னும் சமுத்திரத்தை மகிழ்விக்கும் சந்திரனே! சிறந்த தாமரையை ஒத்த முகத்தைப்பெற்றவனே!  தன் தாமரைப்பாதத்தின் அழகால் மன்மதனையும் தோற்கடித்தவனே! ரகு ராமனே! தன் இடது தொடையில் சீதையை அமர்வித்துக்கொண்டபடி சிறந்த தோற்றத்துடன் விளங்குபவனே! ஆதிசேஷனின் மேல் பள்ளி கொண்டவனே! பக்தர்களுக்கு சந்தோஷத்தை அளிப்பவனே! சந்திரனையும் சூரியனையும் இரு கண்களாகப்பெற்றவனே! மென்மையாகப்பேசுபவனே! களங்கமற்ற கண்ணாடி போன்ற விசேஷமான கன்னங்களை உடையவனே! முனிவரின் சங்கடத்தைப்போக்கியவனே! வெங்கடரமணனே! முகுந்தனே! மங்களத்தைஅளிக்கும் மூலப்பொருளே! நன்மையே செய்பவனே! குருகுஹனுக்கு ஆனந்தத்தை அளிப்பவனே!

உனக்கு ஜெயம் உண்டாகட்டும்!



பல்லவி

Rangapura Vihaara -திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ளவனே!

Jaya - உனக்கு ஜெயம் உண்டாகட்டும்!

Kodanda Raamaavataara - கோதண்டத்தை ஏந்தி ராமனாக அவதரித்தவனே!

Raghuveera - ரகு குலத்தில் தோன்றிய வீரனே!


அனுபல்லவி

Angaja Janaka - அங்கஜன் எனப்படும் மன்மதனின் தந்தையே!

Deva Brndaavana  - தேவர் குழாத்தைக்காத்தவனே!

Saarangendra Varada -கஜேந்திரனுக்கு அருள் பாலித்து வரம் அளித்தவனே!

Ramaantaranga - திருமகளின் உள்ளத்தில் வசிப்பவனே!

Shyamalaanga -கருநீல வண்ணத்தோனே!

Vihanga Turanga - கருடனை வாகனமாகக்கொண்டவனே!

Sadayaapaanga -இரக்கம் நிறைந்தவனே!

satsanga -நல்லோர்களின் கூட்டத்தில் இருப்பவனே!



சரணம்


Pankajaaptakula Jalanidhi Somaa -தாமரையின் நண்பனாகிய சூரியகுலம் என்னும் சமுத்திரத்தை மகிழ்விக்கும் சந்திரனே!

Vara Pankaja Mukha Pattaabhiraamaa - சிறந்த தாமரையை ஒத்த முகத்தைப்பெற்ற பட்டாபிராமனே!

Padha Pankaja Jitakaamaa  - தன் தாமரைப்பாதத்தின் அழகால் மன்மதனையும் தோற்கடித்தவனே!

Raghurama - ரகு ராமனே!

Vaamaanka Gata Seetavara Vaesha - தன் இடது தொடையில் சீதையை அமர்வித்துக்கொண்டபடி சிறந்த தோற்றத்துடன் விளங்குபவனே!

Saeshaanka Shayana - ஆதிசேஷனின் மேல் பள்ளி கொண்டவனே!

Bhakta Santhosha - பக்தர்களுக்கு சந்தோஷத்தை அளிப்பவனே!

Enaanka ravi nayana - சந்திரனையும் சூரியனையும் இரு கண்களாகப்பெற்றவனே!

Mrudu tara bhaasha - மிகவும் மென்மையாகப்பேசுபவனே!

Akalanka Darpana Kapola Visesha -களங்கமற்ற கண்ணாடி போன்ற விசேஷமான கன்னங்களை உடையவனே!

Muni Sankata Harana Govinda - முனிவரின் சங்கடத்தைப்போக்கியவனே!

Venkata Ramana - வெங்கடரமணனே!

Mukunda -முகுந்தனே!

Sankarshana Mula Kanda - மங்களத்தைஅளிக்கும் மூலப்பொருளே!

Sankara - நன்மையே செய்பவனே!

Guruguhananda - குருகுஹனுக்கு ஆனந்தத்தை அளிப்பவனே!



இந்த அருமையான பாடலின் ரசிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

தீக்ஷிதரின் சிறப்புகளில் ஒன்று - அவர் தான் உருவாக்கியுள்ள கீர்த்தனத்தில் ராகத்தின் பெயரையும் சாஹித்யத்தில் ஒளித்து வைத்திருப்பார். அந்தப்பெயர் ராகத்தின் பெயராகத்தனித்து விளங்காமல், அந்தக்கீர்த்தனத்துக்கு அழகான பொருளைத்தருவதாக அமையும். இந்தப்பாடல் 'பிருந்தாவன ஸாரங்கா' என்ற ராகத்தில் அமைந்தது. இந்தப்பெயர் -' தேவ ப்ருந்தாவன ஸாரங்கேந்த்ர வரத'' என்ற சொற்றொடரில் வருகிறது. 'தேவ ப்ருந்த' என்றால் தேவர்களின் குழாம். 'ஆவன' என்றால் காப்பவன்.  'ஸாரங்கம்' என்றால் யானை. 'இந்த்ர' என்றால் தலைவன். அதாவது கஜேந்திரன். 'வரத' என்றால் வரம் அளிப்பவன். ஆகவே ராகத்தின் பெயர் தனியாக வராமல் , 'தேவர் குழாத்தைக்காப்பவனே, கஜேந்திரனுக்கு வரம் அளித்தவனே' என்ற பொருளில் அமைந்துள்ளது.


'Enaanka' - என்றால் மான் குறியை உடையவன் என்று பொருள். முழு நிலவில் ஒரு மான் இருப்பது போல் தோன்றும். ஆகவே சந்திரனுக்கு 'Enaanka' என்ற பெயரும் உண்டு. ரவி என்றால் சூரியன்.

'Darpan' - என்றால் கண்ணாடி; 'kapola' - என்றால் கன்னம். ஆகவே Akalanka Darpana Kapola  - என்றால், 'களங்கமற்ற கண்ணாடி போன்ற  கன்னங்களை உடையவன்' என்று பொருள்.

Guruguha' -  என்பது தீக்ஷிதரின் முத்திரை. அது அவரது எல்லா கீர்த்தனங்களிலும் வரும். குருகுஹன் என்றால் முருகன் என்றும் பொருள். திருமால் முருகனுக்கு ஆனத்தத்தை அளிப்பவன் அல்லவா? ஆகையால் 'Guruguhananda' என்று அமைத்தார்.