Friday 29 June 2018

வாருங்கள், ரசிப்போம்! – 2



நன்றியிற் சிறந்தது, தென்னை மரமா, பனைமரமா?

உலகில் உள்ள பொருட்கள் அனைத்தையும், அறிவு வழங்கும் சாதனங்களாகப் பயன் படுத்தி, அழகான உவமைகள் மூலம் தங்கள் கருத்தை விளக்குவது கவிஞர்களுக்குக் கை வந்த கலை. எந்த மொழியும் இதற்கு விதி விலக்கல்ல. வாசிப்பவரின் திறமையால், வீணையிலிருந்து வரும் நாதத்தின் இனிமை வேறுபடுவதைப்போல, மொழியை உபயோகிப்பவர்களால் தான் ஒருமொழி வளமை நிறைந்ததாகவோ அல்லது சிறந்த கருத்துக்களை அதில் சொல்ல முடியாது என்றோ, கருதப்படுகிறது. கம்பனும், வள்ளுவனும், ஔவையும், பாரதியும், கண்ணதாசனும்,  தமிழை அலங்கரித்து, செழிப்பூட்டி, ஆராதித்திருக்கிறார்கள்.
அவற்றில் இருந்து ஒரு தேன் துளி, இதோ!


நாம் அடிக்கடி பார்க்கும் தென்னை மரமும், பனை மரமும், கவிஞர்களால் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.
 Image result for avvaiyarImage result for coconut tree

தன்னைச்சுற்றி இருப்பவைகளையும், நடப்பவைகளையும் வைத்து பிரமிக்கத்தக்க, உவமைகளைப்பயன் படுத்துவதில் ஔவையாருக்கு நிகர் உண்டா என்று தெரியவில்லை. அவருக்குப் பனை மரத்தைக்காட்டிலும், தென்னையின் மேல் கொஞ்சம் அன்பு அதிகம் தான் போலும்! அவர் தென்னையைப் பற்றிக்கூறும் போது, 'தனக்கு ஒருவர் செய்த உதவியைப் பல மடங்காக, அவர் கேட்காமலே, அவருக்கும், பிறருக்கும், பயன்படும் வகையில் கொடுக்கக்கூடியது தென்னை மரம்' என்கிறார். தென்னைக்கு அவர் கொடுக்கும் அடைமொழிகளும் அவ்வளவு அழகு! 'நின்று, தளரா, வளர்தெங்கு'. செங்குத்தாக நிற்கும்; தளராமல் வளரும்; வளர்ந்து கொண்டே இருக்கும். அதற்குத்தான் 'வளர்தெங்கு' என்று ஒரு வினைத்தொகையையும் போட்டிருக்கிறார். வேரால் தானே எல்லாத் தாவரங்களும் நீரை உறிஞ்சுகின்றன். ஆனால், ஔவையாரின் தென்னையோ, 'தாளால்' நீரை 'உண்கிறது'. பின்னர் அதற்கு ஒரு உருவம் கொடுத்து, இனிமையும் சுவையும் கொடுத்து, ‘இந்தா! எடுத்துக்கொள்’ என்று நமக்கே திருப்பிக்கொடுக்கிறது.

இந்தச் செய்யுளைப் படித்த பின்னர், நாம் பனை மரத்தைப் பற்றி நினைக்கும் போது, அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. மிகவும் சுவையாக ஒரு பட்டி மன்றப் பேச்சாளர் பேசி அமர்ந்த பின்னர், அவருக்கு எதிராகப் பேசுபவருக்கு கொஞ்சம் சங்கடம் தான்! இது போதாது என்று, நம் அதிவீர ராம பாண்டியர், தமது 'வெற்றி வேற்கை' என்னும் நறுந்தொகையில், பனைமரத்தைப்பற்றி, இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே."

"சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும், ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது. உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார்."

இப்போது பனைமரத்துக்கு ஒரு ஆதரவும் இல்லை போல் தோன்றுகிறது. ஏனென்றால், சொல்வது உண்மை தானே! ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்!

அடுத்து வள்ளுவர் வருகிறார். அவரும் நன்றி பாராட்டுதலைப் பற்றித் தான் கூறுகிறார். ஆனால், அவர் தென்னை மரத்தைப் பற்றிக் கூறவில்லை. பனை மரத்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
Image result for valluvarImage result for palm tree with its old fronds

'தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்', என்கிறார்.

அதாவது, ஒரு செயலின் மதிப்பை உணர்ந்தவர்கள், ஒருவர் தமக்குத் தினையளவு (மிகச்சிறிய அளவு) உதவி செய்தாலும், அதைப் பனையளவாக மதித்து நன்றி பாராட்டு வார்கள், என்று குறிப்பிடுகிறார்.

இங்கே, 'தினை'யும், 'பனை'யும், ஒருவேளை, எதுகைக்காக சேர்க்கப் பட்டிருக்குமா? தினையை விடப், பனை பலமடங்கு பெரியது என்பது உண்மை தான். உவமானமும் சரியாக இருக்கிறது, எதுகையும் அழகாய்ப் பொருந்துகிறது. இதை, ஒரு நல்ல குறள் என்று பாராட்டி விட்டு நகர்ந்து விடலாம், தான்!

ஆனால், நம் அறிஞர்கள் இருக்கிறார்களே! அவர்கள், வள்ளுவரையும் மிஞ்சும் வண்ணம் இதற்கு விளக்கம் அளிக்கிறார்கள்.

'தென்னை நன்றிக்கு நல்ல உதாரணம் தான். ஆனால், அது இக்காலத்திய பெற்றோரைப்போலவாம். தன் குழந்தைகளாகிய காய்களைத் தாங்கிப் பிடித்துக் கொள்கின்றனவாம். ஆனால், அதற்கு உதவி செய்த, தாய், தந்தையரைப் போன்ற மட்டைகளை அவ்வப்போது உதிர்த்து விடுகின்றனவாம். அதனால் தான், தென்னை மரத்தில் வரி வரியாக, மட்டைகள் உதிர்ந்த வடு இருக்கும். ஆனால், பனை மரமோ, தனது நுங்கையும் பழங்களையும் போற்றிப் பாதுகாக்கும் அதே நேரத்தில், தனது பெற்றோராகிய பழைய ஓலைகளையும் உதிர்ப்பதே இல்லை. மரம் வளர்ப்பவர்கள், ஒரு வேளை, விசிறிக்காகவோ, மரத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றோ, அவற்றை வெட்டி எடுத்தால் தான் உண்டு. அப்படி வெட்டப்பட்ட பின்னும் அவை முள், முள்ளாக மரத்தின் தண்டுடன் ஒட்டிக்கொண்டிருக்கும்.

ஆகவே, ஒரு அறிஞர் சொல்கிறார் –– தன் மக்களையும், தாய் தந்தையரையும் ஒரே மாதிரி ஆதரவு கொடுத்துப் பார்த்துக் கொள்வதில் பனை மரம் தென்னை மரத்தை விட ஒரு படி மேல் தான். ஆகவே தான், வள்ளுவர், நன்றி பாராட்டுபவர்களுக்குப் பனை மரத்தை உவமையாகக் கூறுகிறார்.’

அட! இப்போது பனை மரத்தின் கை ஓங்கி விட்டதே!

வள்ளுவர் கூட இப்படி யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனாலும், இந்த விளக்கம், வள்ளுவருக்கும் பெருமை சேர்க்கிறது, தானே!

இனிமேல், நாம் கழுத்தை நிமிர்த்திப் பனை மரத்தைப் பார்க்கும் போது, இன்னும் கொஞ்சம் மரியாதையோடு பார்ப்போமா?



இன்னும் ரசிப்போம்!

















No comments:

Post a Comment