Sunday 24 June 2018

வாருங்கள், ரசிப்போம்! - 1


பக்தி இலக்கியங்களில் எவ்வளவுக்கெவ்வளவு பக்தி இருக்கிறதோ, அதைக்காட்டிலும் அதிகமாகவே அழகு இருக்கிறது. நமக்குப்புரியாமலேயே அநேக ஸ்லோகங்களை நாம் சொல்கிறோம். அவற்றைப்புரிந்து கொண்டாலோ, ஆனந்தம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. இக்காலத்தில் நாம் எதையும் நேரடியாக சொல்லி விடுகிறோம். அதிகமான உவமான உவமேயங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், அந்தக்காலங்களில், அவை இல்லாமல் சாதாரணமாகப் பேசுபவர் அரிது என்றே சொல்லலாம்.

உதாரணத்துக்கு,

कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम् ।
आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् ॥

என்ற ஸ்லோகத்தை அநேகர் கேட்டிருப்பீர்கள். அதிகம் சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களுக்கு இதில் 'ராம' என்ற சொல்லும், 'வால்மீகி' என்ற சொல்லும் புரியும். ஆகவே இது வால்மீகியைப் புகழ்ந்து சொல்லும் ஒரு ஸ்லோகம் என்று யூகித்திருப்போம். அது உண்மை தான். ஆனால், அதைச்சொல்லும் அழகு இருக்கிறதே!

இந்த ஸ்லோகம் முழுவதுமே உருவகம் தான். இதைப்புரியும் படி பிரித்துப்பார்க்கலாம்.

कविताशाखां - கவிதை என்னும் கிளையின் மேல்
आरुह्य - ஏறி அமர்ந்து
मधुरं मधुराक्षरम् - இனிமையான, இனிமையான அக்ஷரங்களால் ஆன,
रामरामेति - 'ராம', 'ராம' என்னும்  சொற்களை
कूजन्तं - கூவிக்கொண்டிருக்கும்
वाल्मीकिकोकिलम् - வால்மீகியாகிய குயிலை
वन्दे - வணங்குகிறேன்

'கவிதையாகிய கிளையில் ஏறி அமர்ந்து கொண்டு, 'ராம' 'ராம' என்று இனிமையாகக்கூவும் வால்மீகியாகிய குயிலை வணங்குகிறேன்'

வெள்ளை வெளேர் என்ற தாடியுடன், வயதான தோற்றத்தில், கனிவான முகத்துடன், அறிவு கொப்பளிக்கும் கண்களுடன், நாம் படங்களில் பார்த்திருக்கும் வால்மீகியை, ஒரு மரத்தின் கிளையின் மீது அமர்ந்து கூவிக்கொண்டிருக்கும் குயிலாகச் சித்தரித்திருப்பது எப்படியிருக்கிறது!

இன்னுமொரு உதாரணம். பகவத்கீதையின் த்யான ஸ்லோகத்தில் காணப்படும்

सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनंदन: |
पार्थो वत्स: सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् ||

என்னும் அழகான ஸ்லோகம் உருவகங்களால் தொடுக்கப்பட்ட மாலை எனலாம்.

இதை இப்படிப் பிரித்துப்பொருள் கொள்ளலாம்.

सर्वोपनिषदा: - அனைத்து உப நிஷதங்களும்
गाव: - பசுக்கள்
पार्थ: - பார்த்தன்/ அர்ஜுனன்
वत्स: - கன்றுக்குட்டி (இதில் இருந்து தான் 'வாத்ஸல்யம்' என்ற வார்த்தை வந்தது. தாய்ப்பசு கன்றின் மேல் காட்டும் அன்பு
போன்றது வாத்ஸல்யம்.)
दोग्धा - கறப்பவன்
गोपालनंदन: - கோபால நந்தனனாகிய க்ருஷ்ணன்
दुग्धं - பாலானது
महत् - மகத்தான
गीतामृतं - கீதையாகிய அம்ருதம்
सुधी: - கற்க வேண்டும் என்னும் ஆசை கொண்டவன்
भोक्ता- அதை அனுபவிப்பவன்

உப நிஷதங்களாகிய பசுக்களிடம் இருந்து, அர்ஜுனன் என்ற கன்றின் நிமித்தம், கோபால நந்தனனாகிய க்ருஷ்ணன், மகத்தான கீதை என்னும் அம்ருதத்தை அனைவரும் பயன் பெறுவதற்காகக்கறந்து கொடுக்கிறான். பகவத்கீதையானது அனைத்து உப நிஷதங்களின் சாரம் என்பதும், க்ருஷ்ணனே கறந்தாலும், அர்ஜுனனாகிய கன்று இல்லாதிருந்தால், பகவத்கீதை வெளிப்பட்டிருக்காது என்பதும், இது சாதாரணமான பால் அல்ல, அம்ருதம் என்பதும், பால் எப்படி கன்றுக்கு மட்டும் அன்றி, அனைவருக்கும் பயன்படுகிறதோ, அவ்வாறே, பகவத்கீதையும் அர்ஜுனனுக்கு மட்டும் அன்றி அனைவருக்கும் பயன்படுகிறது என்பதையும் எவ்வளவு சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்!


இன்னும் ரசிப்போம்!

No comments:

Post a Comment