Tuesday 18 August 2015

ராமரின் அக்கா


Tuesday, July 9, 2013



ராமரின் அக்கா

தசரதருக்கு நான்கு மகன்கள் உண்டு என்பது நமக்குத்தெரிந்தது தான். அவருக்கு சாந்தா என்று ஒரு மகளும் இருந்தாள் என்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். தசரதருக்கும்  அவருடைய முதல் மனைவி கௌசல்யைக்கும் பிறந்தவள் சாந்தா. கௌசல்யையும் அவளுடைய சகோதரியான வர்ஷிணியும் கோசல தேசத்து இளவரசிகள். கௌசல்யை அயோத்தியின் அரசனானதசரதனை மணந்தாள். வர்ஷிணி அங்க தேசத்தரசனான லோமபாதனை (ரோமபாதன் என்றும் கூறுவர்) மணந்தாள். கௌசல்யைக்கு சாந்தா பிறந்தாள். ஆனால் வர்ஷிணிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
ஒரு சமயம் தசரதர் அவளுடன் விளையாட்டாகப்பேசிக்கொண்டிருந்த போது
தன் மகளை அவளுக்குக் கொடுப்பதாக வாக்களிக்கப் போய், அரசரின் வாக்கு மீறப்படக்கூடாது என்பதால் உண்மையிலேயே சாந்தாவை லோமபாதருக்கும் வர்ஷிணிக்கும் தத்து கொடுத்து விட்டனர். வர்ஷிணியும் அங்க தேசத்தில் வளர்ந்து வரலானாள்.
அவள் வளர்ந்து கன்னிப்பருவம் எய்திய சமயத்தில் அங்க தேசத்தில் கடுமையான் வறட்சி வந்த்து. மழையே பெய்யவில்லை. அரசவை ஜோதிடர் உடல் தூய்மையும் உள்ளத்தூய்மையும் உள்ள ஒருவர் அந்த தேசத்தில் நுழைந்தால் மழை பெய்யும் என்று கூறினார். அப்படிப்பட்ட ஒருவர் எங்கிருக்கிறார் என்று தேடும் போது அந்த தேசத்தின் காட்டில் விபாண்டகர் என்ற முனிவருடைய மகனான ருஷ்யஸ்ருங்கர் தான் அதற்குத்தகுதியான மனிதர் என்று தீர்மானித்தனர்.

விபாண்டகருக்கும் ஒரு அப்சரஸுக்கும் பிறந்த ருஷ்யஸ்ருங்கர் பிறக்கும் போதே தலையில் ஒரு மான்கொம்புடன் பிறந்தார். அம்முனிவரின் தவத்தைக்கலைப்பதற்காக அனுப்பப்பட்ட அப்சரஸ் தன் வேலை முடிந்தவுடன் திரும்பிச்சென்று விட்டாள். இதனால் பெண்கள் மீதே வெறுப்புக்கொண்ட விபாண்டகர் தன் மகனைப் பெண் வாடையே தெரியாமல் வளர்த்தார். பெண்கள் என்று ஒரு இனம் இருப்பது கூட ருஷ்யஸ்ருங்கருக்குத்தெரியாது. முனிவரிடம் கேட்டு அவரை நகருக்கு அழைத்து வர முடியாது. அதை அவர் அனுமதிக்க மாட்டார்.ஆகவே ரோமபாதர் சில அழகிய இளம்பெண்களுடன் தன் வளர்ப்பு மகளான சாந்தாவையும் முனிவருக்குத்தெரியாமல் காட்டுக்கு அனுப்பி ருஷ்யஸ்ருங்கரை மயக்கித் தன் நாட்டுக்குள் நுழையச்செய்தார். ருஷ்யஸ்ருங்கர் நுழைந்தவுடனேயே கன மழை பெய்து நாடு செழித்து விட்டது. பின்னர் சாந்தாவை ருஷ்யஸ்ருங்கருக்கு மணம் முடித்துக்கொடுத்தார் லோமபாதர்.

பின்னர் இந்த ருஷ்யஸ்ருங்கர் தான் தன் உண்மையான் மாமனாரான தசரதருக்கு மகன்களை வேண்டி புத்ர காமேஷ்டி யாகத்தை நிறைவேற்றிக்கொடுத்து அவருக்கு நான்கு மகன்கள் பிறக்க வழிவகுத்தார்.

பல வருடங்கள் கழித்து ராமர் ஒரு வண்ணானின் பேச்சைக் கேட்டு சீதையைக்காட்டுக்கு அனுப்பிய போது சாந்தா ராமரை மிகவும் கோபித்துக்கொண்டாளாம்.

ராமருக்கு ஒரு அக்கா இருந்ததும் அவளுக்கு இப்படி ஒரு வரலாறு இருந்ததும் பெரும்பாலானோருக்குத்தெரியாமலே போய்விட்டது. இந்தக் குறிப்பும் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. ஆனால் உபன்யாசகர்கள் இந்தக்கதைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


3 comments:

  1. Thanks for making me aware of this story.
    Reply
  2. சுவாரஸ்யமான கதைகள் ....... தினமும் எதிர்பார்க்கிறோம்
    Reply
  3. உண்மை கதைகள்.. Really very interesting Aunty...

No comments:

Post a Comment